Sep 10, 2026 - 11:59 AM

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் இலங்கையின் முதலீட்டு வங்கிச் சந்தையில் முன்னணி நிறுவனமுமான First Capital Holdings PLC, அதிகரித்த உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் வட்டி வீதங்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு மத்தியில், 2026/27 நிதியாண்டின் சவாலான முதல் காலாண்டைக் கடந்து வந்தது. சந்தை நிலவரங்கள், நிலையான வருமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்தபோதிலும், குழுமத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வணிகப் பிரிவுகளான நிறுவன நிதி ஆலோசனை மற்றும் நிறுவனப் பிணைய வர்த்தகம், சொத்து முகாமைத்துவம் மற்றும் பங்கு முகவர் பிரிவு வணிகங்கள் ஆகியவை தொடர்ந்து நேர்மறையான பங்களிப்புகளை வழங்கின.
First Capital Holdings PLC (குழுமம்), முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.2.15 பில்லியன் வரிக்குப் பிந்திய இலாபத்துடன் ஒப்பிடுகையில், 30 ஜூன் 2026 அன்று முடிவடைந்த காலாண்டில் ரூ.726 மில்லியன் வரிக்குப் பிந்திய நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.
2026/27 முதல் காலாண்டில் தொழிற்பாட்டுச் செலவுகளுக்கு முன் குழுமத்தின் விற்பனை மீதான தேறிய நட்டம் ரூ.565 மில்லியன் ஆக பதிவாகியது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் தொழிற்பாட்டுச் செலவுகளுக்கு முன் விற்பனை மீதான தேறிய இலாபம் ரூ.3.43 பில்லியன் ஆக இருந்தது. மதிப்பாய்வுக்கு உட்பட்ட காலாண்டில், பிரதானமாக மத்திய கிழக்கின் மோதலால் உந்தப்பட்ட புவிசார் அரசியல் பதற்றங்களால் அதிகரித்த உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளால் குழுமத்தின் நிதி செயல்திறன் பாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் பணவீக்க அழுத்தங்களை எதிர்கொள்ள இலங்கை மத்திய வங்கி இக் காலாண்டில் தனது கொள்கை வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்தது. இப் பின்னணியில், வர்த்தக வாய்ப்புகள் குறிப்பிடத்தக்களவு குறைந்ததுடன், வர்த்தகப் பிரிவுகளின் போர்ட்ஃபோலியோக்களில் பாதகமான சந்தை மதிப்பீட்டு மாற்றங்கள் பதிவாகின.
முதன்மை அரசுப் பத்திர வணிகப் பிரிவு (The Primary Dealer division) 2025/26 இன் முதல் காலாண்டில் பதிவான வரிக்குப் பிந்தைய இலாபமான ரூ.1.55 பில்லியனுடன் ஒப்பிடும்போது 2026 ஜூன் 30 இல் முடிவடைந்த காலாண்டில் வரிக்குப் பிந்திய நட்டமாக ரூ.741 மில்லியனை பதிவு செய்தது. பெறுபேறுகளில், ரூ.351 மில்லியன் நிகர வட்டி வருமானமும் அரச பிணையங்களில் ஏற்பட்ட ரூ.1.80 பில்லியன் வர்த்தக இழப்பும் உள்ளடங்கும்.
முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர வட்டி வருமானம் ரூ.503 மில்லியனாகவும் அரச பிணையங்களிலிருந்து கிடைத்த வர்த்தக இலாபங்கள் ரூ.2.06 பில்லியனாகவும் பதிவாகியிருந்தன. நிறுவன நிதி ஆலோசனை மற்றும் நிறுவன பிணைய வணிகப் (Corporate Finance Advisory and Corporate Dealing Securities) பிரிவுகள் 2026 ஜூன் 30 முடிவடைந்த காலாண்டில் வரிக்குப் பிந்தைய இலாபமாக ரூ.22 மில்லியனை பதிவு செய்தது. இது 2025/26 இன் முதல் காலாண்டில் ரூ.587 மில்லியனாக இருந்தது.
சொத்து முகாமைத்துவப் (The Wealth Management) பிரிவு, 2026 ஜூன் 30 இல் முடிவடைந்த காலாண்டில் வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ.6 மில்லியனை பதிவு செய்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.27 மில்லியனாகக் காணப்பட்டது. இப் பிரிவு தொடர்ந்து வலுவான சொத்துத் தளத்தை பராமரிப்பதுடன் 2026 ஜூன் 30 நிலவரப்படி நிர்வகிக்கப்பட்ட சொத்துகளின் (Assets Under Management) பெறுமதி ரூ.93.3 பில்லியனாக இருந்தது. இது, 2026 மார்ச் 31 நிலவரப்படி ரூ.96.2 பில்லியனாக இருந்தது. பங்கு முகவர் (Stock Brokering) பிரிவு, 2025/26 இன் முதல் காலாண்டில் பதிவான வரிக்கு பிந்தைய இலாபமான ரூ.32 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2026 ஜூன் 30 முடிவடைந்த காலாண்டில் ரூ.24 மில்லியனை பதிவு செய்தது.
செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த First Capital Holdings PLC இன் தலைவர் ராஜேந்திர தியாகராஜா, “First Capital நிறுவனம் மூலதனச் சந்தைகளின் பல்வேறு துறைகளில் வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளதுடன், பல்வேறு சந்தைச் சுழற்சிகளை ஒழுக்கத்துடனும் தெளிவான கண்ணோட்டத்துடனும் எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நிலையான வருமானச் சந்தைகளுக்கு இக்காலாண்டு சவாலான சூழலை ஏற்படுத்தியிருந்த போதிலும், எமது ஆலோசனை, பிணையங்கள், சொத்து முகாமைத்துவம் மற்றும் பத்திரங்கள் தொடர்பான வணிகச் செயற்பாடுகள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டிருப்பது, எமது ஒட்டுமொத்த வணிகத் தளத்தின் வலிமையைப் பிரதிபலிக்கிறது. எமது சந்தை நிலையை மேலும் வலுப்படுத்துதல், திறன்களை விரிவுபடுத்துதல் மற்றும் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்கு நிலையான பெறுமதியை உருவாக்குதல் ஆகியவற்றில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். என்றார்.
First Capital Holdings PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி டில்ஷான் வீரசேகர கருத்து தெரிவிக்கையில், “இக் காலாண்டின் செயல்பாடுகள், மாற்றமடைந்து வரும் சந்தைச் சூழலில் சமநிலையானதும் பன்முகப்படுத்தப்பட்டதுமான வணிக மாதிரியைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. வட்டி வீதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் நிலையான வருமான வர்த்தகச் செயற்பாடுகளைப் பாதித்தபோதிலும், எமது ஏனைய பிரதான வணிகச் செயற்பாடுகள் தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்கின. சந்தை நிலைமைகள் மாற்றமடைந்து வரும் நிலையில், செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துதல், எமது திறன்களை விரிவுபடுத்துதல் மற்றும் மூலதனச் சந்தைகளில் உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காணுதல் ஆகியவற்றில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள எமது தளங்களும் வாடிக்கையாளர் உறவுகளும், முன்னோக்கிச் செல்லும் நிலையில் வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன.” என்றார்.
பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC ஆகியவை, ISO 14064 தரநிலைகளுக்கு இணங்க, இலங்கை காலநிலை நிதியத்தின் ஊடாக 2025/26 ஆம் ஆண்டுக்கான சுயாதீன பசுமைக்குடில் வாயு (Greenhouse Gas - GHG) உமிழ்வு சரிபார்ப்பு சான்றிதழை வெற்றிகரமாகப் பெற்றன. தனது நிறுவப்பட்ட திறன்கள், அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் மற்றும் வலுவான சந்தை நிலை ஆகியவற்றின் ஆதரவுடன், First Capital நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும், வாடிக்கையாளர் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதிலும், இலங்கையின் மூலதனச் சந்தைகளின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
First Capital Holdings PLC பற்றி
இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், முதன்மை அரசுப் பத்திர வர்த்தகர், பெருநிறுவன நிதி ஆலோசகர், சொத்து முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, செயலாற்றுகை முதலில் எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. மூலதனச் சந்தை தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்துத்தை கொண்டுள்ள First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC (துணை நிறுவனம்) ஆகியவற்றின் கடன் மதிப்பீடுகள், லங்கா ரேட்டிங் ஏஜென்சியால் (LRA) நிலையான கண்ணோட்டத்துடன் கூடிய ‘A+’ என்னும் நிறுவன மதிப்பீடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. First Capital Holdings PLC, உலகப் பொருளாதார இதழ் விருதுகள் 2026 இல் இலங்கையின் முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டமை முதலீட்டு வங்கித் துறையில் ஒரு நம்பகமான தலைவராக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 2025 இல் இலங்கையில் Superbrands தகுதியை அடைந்த முதல் முதலீட்டு நிறுவனமாக விளங்கி தனது வலுவான வர்த்தகநாம இருப்பையும் சந்தைத் தலைமைத்துவத்தையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
First Capital Holdings PLC - https://firstcapital.lk/





























