Sep 10, 2026 - 08:30 PM

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரண நஷ்டஈட்டுத் தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்க முடிந்த மிகப்பெரிய நிவாரணம் என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழந்த 50 புலம்பெயர் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடாக 7 கோடி ரூபா தொகையை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் ஒருவருக்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் 6 இலட்சம் ரூபா தொகையே வழங்கப்பட்டு வந்தது.
அத்தொகை போதுமானதாக இல்லாததால், அதனை 20 இலட்சம் ரூபா வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
வருடாந்தம் வெளிநாடு செல்லும் பணியாளர்களில் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான காரணங்களால் அவர்களில் சுமார் 250 பேர் வரை ஆண்டதோறும் உயிரையிழக்கின்றனர்.
இந்நிலையைக் குறைப்பதற்குத் திட்டங்களுடன் கூடிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
"வெளிநாட்டுப் பணியாளர்கள் ஆண்டதோறும் இந்நாட்டுக்கு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை பணவனுப்பல்களாக (Remittances) வழங்குகின்றனர். அவர்களுக்காக மிகப்பெரிய அளவிலான நலன்புரி வசதிகளைப் பணியகம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருவதைப் போல, நாங்கள் மேலும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதில் ஒரு திட்டம்தான் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வீடமைப்புக்கடனாக வங்கிகள் மூலம் 10 மில்லியன் ரூபா தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகும். குறைந்த வட்டியில் இந்தக் கடன் வழங்கப்படுவதோடு, பணியகமும் அந்த வட்டியில் ஒரு பகுதியைச் செலுத்த நடவடிக்கை எடுக்கிறது. அதேபோல பாடசாலை மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் மற்றும் வருடாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவு போன்ற நலன்புரி வசதிகளைப் பணியகம் ஏற்கனவே பணியாளர்களுக்காக வழங்கி வருகிறது."என்றார்.





























