Sep 10, 2026 - 04:38 PM

இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (10) நுவரெலியா, சீதாஎலியவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் நுவரெலியா விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மத, கலாசார மற்றும் மக்கள் மட்டத்திலான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்வாக அமைந்தது.
ஆலயத்திற்கு வருகை தந்த ராஜ்நாத் சிங்கை, ஆலய பரிபாலன சபையின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், மஞ்சுள சுரவீரஆரச்சி, நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் உள்ளிட்ட ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
விசேட சமய வழிபாடுகளில் ஈடுபட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர், அதனைத் தொடர்ந்து அனுமன் பாதத்தை தரிசித்து வழிபட்டதுடன், புனித கங்கைப் பகுதிக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.





























