Sep 14, 2026 - 07:31 PM

நாட்டின் முக்கிய பல மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் 62 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் இன்றைய தினம் (14) முதல் வரும் 19ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர், வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மத்திய, கிழக்கு, வடமேல், வடக்கு, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் ஆகிய மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாத காலத்தில் நாளொன்றுக்கு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1200 - 1300 வரை உயர் மட்டத்தில் காணப்பட்டதுடன், அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பு காரணமாக அந்த எண்ணிக்கை தற்போது நாளொன்றுக்கு 100 - 200 நோயாளர்கள் வரை கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் காலத்தில் மழை உடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதால், நீர் தேங்கி நுளம்புகள் பெருகும் அபாயம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும், டெங்கு என்பது ஆண்டு முழுவதும் காணப்படும் ஒரு நோய் என்பதால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் மூலம் மீண்டும் ஒரு தொற்றுநோய் நிலைமை உருவாவதைத் தடுப்பதே இந்த விசேட ஒழிப்பு வாரத்தின் முதன்மை நோக்கம் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.





























