Sep 15, 2026 - 06:49 PM

மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 பேரின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட மூவரையும் எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று (15) உத்தரவிட்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை, காத்தான்குடியில் TMVP கட்சி உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலேயே வழக்கின் விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இக்கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் உள்ள மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட அதேவேளை, பிள்ளையான் சிறையிலிருந்து காணொளி ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது பிள்ளையான் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரநாயகம், தனது சேவைபெறுநருக்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவு மற்றும் அவரது தாயாருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கோருவது தொடர்பில் வாதங்களை முன்வைத்தார். இதையடுத்த நீதவான், இது குறித்த அறிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், இக்கொலை வழக்கின் மற்றொரு சந்தேகநபரும் லண்டனில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் 'பொலிஸ் பாயிஸ்' என அழைக்கப்படும் மொஹமட் பாய்ஸைக் கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பித்த நீதவான், அவரை சர்வதேச பொலிஸார் மூலம் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றிற்குத் தெரிவித்தனர்.





























