Sep 16, 2026 - 08:26 PM

ஒழுங்கடமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'கொஸ்மல்லி' என்பவரின் மிக நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற 'பூத கழுவா' வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 21 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள், 4 வாள்கள் உட்பட பல ஆயுதங்கள் மற்றும் 4 கைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முகங்களை மூடிய நால்வரடங்கிய கும்பல் ஒன்று கடந்த 7 ஆம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்து, 'பூத கழுவா' இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவர் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோதே கூர்மையான ஆயுதங்களால் தாக்கி இக்கொலையைச் செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தது.
இவ்வாறு கொல்லப்பட்ட தமித் பிரசாத் பொன்சேகா தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.
இவர் 'கொஸ்மல்லி' என்பவருடன் டுபாயில் சில வருடங்கள் தங்கியிருந்துள்ளதுடன், அங்கு அவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட பின்னர் சில வாரங்களுக்கு முன்னரே மீண்டும் நாட்டிற்குத் திரும்பியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
'பூத கழுவாவைக் கொலை செய்ய வந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் புகைப்படம் CCTV காணொளிகள் மூலம் பெறப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பதிவு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த நபர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அங்குலானைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சுமார் 65% ஒத்துப் போவதாகக் குற்றப் பதிவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இக்கொலைச் சம்பவத்திற்குத் தன்னுடன் மேலும் நால்வர் சென்றதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர்களில், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான 'சாண்டோ' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான உதவியாளராக ஒருவர் உள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவன் தெலவல வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த 'சஞ்சு' என்பவர் என சந்தேகநபர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபரைக்கைது செய்து நடத்திய விசாரணையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான 3 வாள்கள் மற்றும் மிதிவண்டியின் பாகங்களைக் கொண்டு குற்றக் கும்பல் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட கூர்மையான ஆயுதம் என்பன சந்தேகநபர் வசிக்கும் வீட்டின் பின்புறக் காட்டுப் பகுதியில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அச்சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், இக்குற்றச் செயலுக்காக கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 50,000 ரூபாய் வாடகைக்கு முச்சக்கரவண்டி பெறப்பட்டு, அதற்குப் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்டு இக்குற்றத்தைச் செய்ய வந்ததாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டியை ஓட்டி வந்தவரும் தெலவல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்ததையடுத்து, அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகே தலைமையிலான குழுவினர் இவ்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























