Sep 16, 2026 - 08:59 PM

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டு தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ நோயாளர் அறை தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) பிற்பகல் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.
இந்த புதிய நோயாளர் அறைத் தொகுதி பல நவீன வசதிகளைக் கொண்டிருப்பதுடன், மின் தூக்கிகள், குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புக்கள், தீயணைப்பு கட்டமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோக கட்டமைப்பு போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்படும்.
தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைப்பதும், 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களைப் பரிசோதனைக்குட்படுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் மூலம் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவது மட்டுப்படுத்தப்படும்.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து, புதிய வார்டு தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மருத்துவமனை ஊழியர்களுடன் சுமுகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.





























