Sep 15, 2026 - 08:31 PM

ஆயிரம் வீடுகளைக் கொண்ட ஸ்டேடியம்கம 'போர்ட் வியூ ரெசிடென்சீஸ்' (Port View Residencies) புதிய அடுக்குமாடி வீட்டுத் தொகுதி இன்று (15) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் இரங்க குணசேகர ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தித் திட்டமிடலுக்கு அமைவாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வழிகாட்டலில் கொழும்பு நகர மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த அடுக்குமாடி வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக 9,866 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இதற்கான நிதி ஒதுக்கீடு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) கடன் உதவியின் கீழ் பெறப்பட்டுள்ளது.
15 மாடிகளைக் கொண்ட இந்த வீட்டுத் திட்டம், தலா 500 சதுர அடி பரப்பளவைக் கொண்ட 1,000 வீட்டு அலகுகளையும், மக்களுக்குத் தேவையான பொது வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
குடியிருப்பாளர்களின் பொதுவான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதார மையம், சமுதாயக் கூடம், பகல்நேர பராமரிப்பு மையம், பொலிஸ் காவல் சாவடி, கிராம நிலதாரி அலுவலகம், தீயணைப்பு அலகு, பல்பொருள் அங்காடி, சிறுவர் பூங்கா மற்றும் கைப்பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல வசதிகளுடன் இதன் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அடுக்குமாடி வீட்டுத் திட்டத்தின் பொது வசதிகளை மேம்படுத்தும் வகையில் முழுமையான உள்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் அப்பகுதியின் வீதி அமைப்பு மற்றும் கால்வாய் அமைப்புகளை அபிவிருத்தி செய்தல், புதிய சமுதாயக் கூடத்தை நிர்மாணித்தல் மற்றும் தற்போதைய விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துதல் ஆகியவையும் அடங்கும்.





























