Oct 7, 2026 - 09:54 PM

கொழும்பு கோட்டை நீதவானாக கடமையாற்றிய போது இடைநீக்கம் செய்யப்பட்ட கோசல சேனாதீரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சட்டவிரோதமாக மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளைப் பெற்றுக் கொண்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் சேனாதீரவின் சேவை இடைநிறுத்தப்பட்டது.
27 மாதங்களாக 20 க்கும் மேற்பட்ட சாட்சியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீர்க்கமான விசாரணைகளின் பின்னர், பிரதம நீதியரசர் தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதற்கமைய, கோசல சேனாதீரவை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் குற்றமற்றவர் என விடுவித்து, நிலுவைச் சம்பளங்கள் அனைத்தையும் வழங்கி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இணைத்து மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்.
கோசல சேனாதீர விசேட தரத்தின் சிரேஷ்ட நீதவானாகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.































