Oct 7, 2026 - 10:53 PM

பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, அவர் அணிந்திருந்த காவி உடை அகற்றி, வேறு உடையை அணிவித்து துறவற நிலையை இழக்கச் செய்தமை பாரியதொரு தவறு என அஸ்கிரி மகா விகாரைப் பிரிவின் பிரதான பதிவாளர் பூஜ்ய மெதகம தம்மாநந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (07) விசேட கூற்றையொன்றை விடுத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஞானசார தேரரை இத்தகைய நிலைக்கு ஆளாக்கியமை குறித்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மகா சங்கத்தினராகக் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த பூஜ்ய மதகம தம்மாநந்த தேரர்:
"ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அந்தத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், சிறையிலடைக்கப்பட்ட பின்னர் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, துறவறத்தை நீக்கி வேறு உடையுடன் அழைத்து வந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் படி சட்டரீதியாகத் தவறானதாகும் என்பது அச்சட்டத்தைப் பரிசீலிக்கும்போது எமக்குத் தெரியவருகிறது.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக, அவர் முன்னதாகப் பயன்படுத்திய ஆடையுடனேயே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் பாரதூரமானது.
நமது அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போன்று, பாரம்பரியமாக எமது வழக்கமான சட்டமுறைகள் மற்றும் பழங்காலச் சட்ட அமைப்புகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுகின்றது.
ஆனால், அத்தகை நிலையைப் பொருட்படுத்தாமல் எமது ஞானசார தேரரின் துறவறத்தை நீக்கியதன் மூலம் சாசன ரீதியாக ஒரு தவறான முன்மாதிரி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாம் ஏற்கனவே சட்டத் தேவைகளின் அடிப்படையில் கூடுதல் கவனம் செலுத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அரசியல் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு, சாசன ரீதியாகச் சிந்திக்கும் போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் சந்தர்ப்பத்தில் துறவறத்தை நீக்கி ஆஜர்படுத்தியது பாரிய தவறாகும்.
ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலை குறித்துக் கலந்துரையாடி, அவரை மீண்டும் பிக்குவாக நிலைநிறுத்தும் பணி அவசியமாயின், அது செய்யப்பட வேண்டும்.
ரோம டச்சுச் சட்டத்தின் மூலம் நமக்குத் தண்டனை அளிக்கும் பாரம்பரியமே உள்ளது. ஆனால் பௌத்த சட்டத்தின் படி பார்த்தால், தவறு செய்த நபரை மன்னித்து அவரை மீண்டும் நல்வழிப்படுத்தும் பாரம்பரியமே நமக்கு இருக்கிறது.
இருப்பினும், நாம் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை மதித்து செயல்படுவதோடு, சிறைச்சாலையிலிருந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் சந்தர்ப்பத்தில் அந்த கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாகச் செயல்படுவதில் விசேட கவனம் செலுத்துகிறோம்.
ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தொடர்பில் மகா சங்கத்தினராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். சாசன ரீதியாகப் பார்க்கும்போது இது மிகவும் பாரதூரமான தவறாகும்" எனத் தெரிவித்தார்.































