Nov 19, 2026 - 05:40 PM

இலங்கையின் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வங்கிப் புதுமைகளின் முன்னோடி என்ற தனது நிலையை மீள உறுதிப்படுத்தும் வகையில், கொமர்ஷல் வங்கியானது Payable Pvt Ltd. மற்றும் Mastercard ஆகியவற்றுடன் இணைந்து 'Payable TAP' சேவையை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது தெற்காசியாவிலேயே 'Mastercard Cloud Commerce' தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும் முதலாவது சந்தர்ப்பமாகும். இப்புதிய தீர்வு முறைமையானது, NFC வசதியுடைய எந்தவொரு Android ஸ்மார்ட்போனையும் பாதுகாப்பான, அனைத்து ஒழுங்குமுறைகளுக்கும் இணங்கக்கூடிய தொடுகையில்லாக் கொடுப்பனவு முனையமாக மாற்றியமைக்கிறது. இதன் மூலம் POS இயந்திரங்களுக்கான தேவை முழுமையாக அற்றுப்போகும்.
'Mastercard Cloud Commerce' தொழில்நுட்பத்தின் மூலம் வலுவூட்டப்பட்டுள்ள 'Payable TAP' மென்பொருள் அடிப்படையிலான SoftPOS தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியாகும். இது பிரதான கொடுப்பனவுச் செயலாக்கம், அங்கீகரிப்பு மற்றும் பாதுகாப்புச் செயல்பாடுகளைச் சாதனத்திலிருந்து மெய்நிகர் முறைமைக்கு நகர்த்துகிறது. இக்கட்டமைப்பானது அமைப்பின் விரிவாக்கத் திறனை மேம்படுத்துவதுடன், நிகழ்நேர மோசடி கண்காணிப்பைச் சாத்தியமாக்கி, வணிகர்களுக்கு எவ்வித இடையூறுகளுமின்றித் தொடர்ச்சியான மென்பொருள் இற்றைப்படுத்தல்களையும் உறுதிசெய்கிறது.
'Payable TAP' ஊடாக வணிகர்கள் பௌதீக கடனட்டை மற்றும் வரவு அட்டைக் கொடுப்பனவுகள் மாத்திரமன்றி, டிஜிட்டல் Wallets மூலமான கொடுப்பனவுகளையும் 'Tap and Pay' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பரிவர்த்தனைக்கு ரூபா 100,000 வரையிலான வரம்புடன் ஏற்றுக்கொள்ள முடியும். அத்துடன், இத்தளம் QR குறியீட்டுக் கொடுப்பனவுகளையும் ஆதரிக்கிறது. இலகுவான பயன்பாட்டை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 'Payable TAP', சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழி இடைமுகத்தைக் கொண்டுள்ளதுடன், குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வழியாக உடனடி டிஜிட்டல் பற்றுச்சீட்டுகளையும் வழங்குகிறது. மேலும், ஒரே கணக்கின் கீழ் பல ஸ்மார்ட்போன்களை நிறுவனங்கள் செயற்படுத்திக்கொள்ள முடியும் என்பதால், விநியோக சேவைகள் மற்றும் பல விற்பனை முனைகளைக் கொண்ட சில்லறை வணிகச் சூழல்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது.
பாரம்பரிய POS முனையங்களுடன் தொடர்புடைய செலவினங்களையும் சிக்கல்களையும் அகற்றுவதன் மூலம், சந்தை வியாபாரிகள், நடமாடும் உணவக நடத்துநர்கள், விநியோகப் பணியாளர்கள் மற்றும் பருவகால வர்த்தகர்கள் உள்ளிட்ட குறு மற்றும் சிறு வணிகர்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முழுமையாகப் பங்கெடுப்பதற்கான சந்தர்ப்பங்களை 'Payable TAP' வழங்குகின்றது.
இது குறித்துக் கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க, 'இது பெருமளவில் கொடுப்பனவு உட்கட்டமைப்புக்கான அணுகலை மறுவரையறை செய்வதாகும். கொடுப்பனவு ஏற்பானது வன்பொருளிலிருந்து மென்பொருளுக்கும், சாதனங்களிலிருந்து மெய்நிகர் முறைமைக்கும் மாறும்போது, முன்னொரு காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரப் பங்களிப்பைக் கட்டுப்படுத்திய தடைகள் முற்றிலுமாக அகன்றுவிடுகின்றன.' எனத் தெரிவித்தார்.
இலங்கையின் முன்னணி Fintech மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு வழங்குநரான Payable நிறுவனத்தின் இணை நிறுவுனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. யோஹான் விஜேசிறிவர்தன தெரிவிக்கையில், 'நிதிசார் உள்ளடக்கம் என்பது, சந்தை வியாபாரி, விநியோகப் பணியாளர் முதல் சிறிய கடை உரிமையாளர் வரை இலங்கையிலுள்ள ஒவ்வொரு வணிகரும் ஒரு பெரும் சில்லறை வர்த்தகரைப் போன்றே டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான சமமான அணுகலைப் பெறுவதை உறுதி செய்வதாகும். 'Payable TAP' எம்மை அந்த இலக்கை நோக்கி இட்டுச் செல்கிறது. இதற்கென தனியாக வன்பொருட்களை வாங்க வேண்டிய அவசியமோ, சிக்கலான நடைமுறைகளோ இல்லை.' எனத் தெரிவித்தார்.
Mastercard நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் திருமதி. மஹேஷா அமரசூரிய குறிப்பிடுகையில், 'Mastercard இன் 'Tap on Phone' வசதியானது உலகெங்கிலும் 110 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் அட்டை மூலமான கொடுப்பனவு ஏற்பை பரவலாக்க உதவியுள்ளது. தற்போது 'Cloud Commerce' ஊடாக, முக்கியமான கொடுப்பனவுச் செயல்பாடுகளை மெய்நிகர் தளத்திற்கு நகர்த்துவதன் மூலம் அத்தொலைநோக்குப் பார்வையை நாம் மேலும் ஒருபடி முன்னெடுத்துச் சென்று, அதிக நெகிழ்வுத்தன்மை, விரிவாக்கம் மற்றும் அணுகல்தன்மையை ஏற்படுத்துகிறோம்.' எனத் தெரிவித்தார்.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான 'Top 1000 World Banks' தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைந்துள்ள 274 கிளைகள் மற்றும் தன்னியக்க இயந்திரங்களின் விரிவான வலையமைப்புடன் செயற்பட்டுவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
































