Nov 19, 2026 - 06:50 PM

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வீதியோரங்களில் நீண்ட நாட்களாகப் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 900 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றை 15 நாட்களுக்குள் உரிமை கோராவிட்டால் இலத்திரனியல் ஏலம் (E-Auction) மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவித்தலில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துக் காவல் நிலையப் பகுதிகளிலும் வீதியோரங்களில் நீண்ட நாட்களாகக் கேட்பாரற்றுப் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 900 வாகனங்கள் அகற்றப்பட்டு, தற்போது கோட்டூர்புரம் காவல் நிலையக் குடியிருப்பு வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்புறப்படுத்தப்பட்டுள்ள இந்த 900 வாகனங்களின் முழு விபரங்களும் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள், உரிய ஆவணங்களுடன் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தை இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் நேரில் அணுகித் தமது வாகனங்களை உரிமை கோரிப் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட 15 நாட்கள் கால அவகாசத்துக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் அனைத்தும் இலத்திரனியல் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
































