Nov 19, 2026 - 05:45 PM

ஸ்திரத்தன்மை மற்றும் இடர் முகாமைத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து தனது மூலோபாய முன்னுரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமும், இலங்கையின் மூலதனச் சந்தைத் துறையில் முன்னோடி நிறுவனமுமான First Capital Holdings PLC, 2026 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த 2026/27 நிதியாண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் ரூ. 1.27 பில்லியனை வரிக்குப் பின்னரான நட்டமாகப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 3.43 பில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாக நிறுவனம் பதிவு செய்திருந்தது. 2026/27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் குழுமத்தின் வரிக்குப் பின்னரான நட்டம் ரூ. 0.54 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.
குழுமத்தின் நிதிப் பெறுபேறுகள், நாணயக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் நிலையான வருமான விளைவுகளின் மீதான அழுத்தங்கள் உள்ளிட்ட சவாலான சந்தைச் சூழலைப் பிரதிபலித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிய புவிசார் அரசியல் பதற்றங்களுடன் தொடர்புடைய பணவீக்க அழுத்தங்கள் காரணமாக, 2026 மே மாதத்தில் நாணயக் கொள்கை வட்டி வீதம் 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டது. இதன் தாக்கம், குறித்த காலப்பகுதியின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலாம் காலாண்டின் இறுதிப் பகுதியிலும் இரண்டாம் காலாண்டிலும் அரசாங்கப் பிணையங்களின் வருவாய் வீதங்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டதுடன், அவை நிலையான வருமானம், கடன் மற்றும் பங்கு வர்த்தகப் பிரிவுகளின் செயற்பாடுகளையும் பாதித்தன.
எனினும், சந்தை ஏற்ற இறக்கங்கள் First Capital நிறுவனத்திற்குப் புதிய அனுபவமல்ல. நிதிச்சந்தையின் பல்வேறு கட்டங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முகங்கொடுத்து, கடந்த காலங்களில் இதுபோன்ற சவாலான காலப்பகுதிகளை குழுமம் வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது. 2021/22 நிதியாண்டில் சவாலான சந்தைச் சூழலுக்கு மத்தியில் ரூ. 652 மில்லியனை வரிக்குப் பின்னரான நட்டமாக குழுமம் பதிவு செய்திருந்தது. சந்தை நிலைமைகள் மாற்றமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் இலாபப் பாதைக்குத் திரும்பியது. அதன்படி, 2022/23 நிதியாண்டில் ரூ. 2.65 பில்லியனையும், 2023/24 நிதியாண்டில் ரூ. 10.16 பில்லியனையும், 2024/25 நிதியாண்டில் ரூ. 5.02 பில்லியனையும் மற்றும் 2025/26 நிதியாண்டில் ரூ. 2.10 பில்லியனையும் வரிக்குப் பின்னரான இலாபமாகப் பதிவு செய்தது. இப் பெறுபேறுகள், சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக்கொண்டு, நீண்டகால வர்த்தகச் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் நிறுவனத்தின் திறனையும், சந்தை தொடர்பான அதன் ஆழ்ந்த அனுபவத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.
இதன் விளைவாக, குழுமத்தின் பிரதான வர்த்தகப் பிரிவுகளில் சவாலான வர்த்தகச் சூழல் வெவ்வேறு விதமாக தாக்கத்தை செலுத்தியது. 2026/27 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் முதன்மை அரசுப் பத்திர வணிகப் பிரிவு (The Primary Dealer division) ரூ. 540 மில்லியனை வரிக்குப் பின்னரான நட்டமாகப் பதிவு செய்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இப்பிரிவு ரூ. 1.57 பில்லியனை இலாபமாகப் பதிவு செய்திருந்தது. அரசாங்கப் பிணையங்கள் தொடர்பான வர்த்தகத்தில் ஏற்பட்ட ரூ. 1.69 பில்லியன் நட்டம் இப்பிரிவின் பெறுபேறுகளைப் பெரிதும் பாதித்தது. மாறாக, 2025/26 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இதே வர்த்தக நடவடிக்கைகள் மூலம் ரூ. 1.81 பில்லியன் இலாபம் கிடைத்திருந்தது. மேலும், நிகர வட்டி வருமானம் கடந்த ஆண்டின் ரூ. 988 மில்லியனிலிருந்து ரூ. 687 மில்லியனாகக் குறைந்தது.
அதே வேளை, கடன் மற்றும் பங்குச் சந்தைகளில் நிலவிய சவாலான வர்த்தகச் சூழலைத் தொடர்ந்து நிறுவன பிணைய வணிகப் (Corporate Dealing Securities) பிரிவு ரூ. 834 மில்லியனை வரிக்குப் பின்னரான நட்டமாகப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இப்பிரிவு ரூ. 1.78 பில்லியனை இலாபமாகப் பதிவு செய்திருந்தது.
இதற்கு மாறாக, நிறுவன நிதி ஆலோசனைப் (Corporate Finance Advisory) பிரிவு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 25 மில்லியனாக இருந்த இப்பிரிவின் வரிக்குப் பின்னரான இலாபம், இம்முறை ரூ. 69 மில்லியனாக அதிகரித்துள்ளது.
சொத்து முகாமைத்துவப் (The Wealth Management) பிரிவு, 2025/26 நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ. 48 மில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாகப் பதிவு செய்திருந்த நிலையில், இம்முறை ரூ. 3 மில்லியன் என்ற சிறிய அளவிலான நட்டத்தைப் பதிவு செய்துள்ளது. 2026 செப்டெம்பர் 30ஆம் நிலவரப்படி இப்பிரிவின் நிர்வகிக்கப்பட்ட சொத்துகளின் (Assets Under Management) பெறுமதி ரூ. 92.4 பில்லியனாக இருந்தது.
பங்கு முகவர் (Stock Brokering) பிரிவு தொடர்ந்து இலாபத்தைப் பதிவு செய்திருந்தாலும், ஆறு மாத காலப்பகுதிக்கான வரிக்குப் பின்னரான இலாபம் கடந்த ஆண்டின் ரூ. 116 மில்லியனிலிருந்து ரூ. 12 மில்லியனாகக் குறைந்துள்ளது. சாதகமற்ற சந்தைச் சூழலுக்கு மத்தியில் பங்குச் சந்தை நடவடிக்கைகள் மந்தமடைந்தமை, வர்த்தக அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த சந்தைச் செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியமை ஆகியவை இப்பெறுபேறுகளிற்கு காரணங்களாக அமைந்தன.
பரந்த பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும், First Capital Holdings PLC குறித்த காலப்பகுதியில் துறைசார் அங்கீகாரங்களைத் தொடர்ந்து பெற்றுள்ளது. 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகப் பொருளாதார இதழால் (World Economic Magazine) ‘Best Investment Banking Firm in Sri Lanka என்ற விருதைப் பெற்றதுடன், மதிப்புமிக்க LMD 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியலிலும் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
First Capital Holdings PLC இன் தலைவர் ராஜேந்திர தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில், “அதிகரித்த வட்டி வீதங்கள் மற்றும் இரண்டாம் நிலைச் சந்தையில் ஏற்பட்ட வருவாய் மாற்றங்களால் ஆண்டின் முதல் அரையாண்டில் கடன் மற்றும் பங்குச் சந்தை வர்த்தக நடவடிக்கைகள் சவால்களை எதிர்கொண்டன. இதன் தாக்கம் முதன்மை அரசுப் பத்திர வணிகப் பிரிவு மற்றும் நிறுவன பிணைய வணிகப் பிரிவுகளின் செயற்திறனில் பிரதிபலித்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், இடர் முகாமைத்துவத்தில் ஒழுங்குமுறை, வலுவான நிதிநிலை மற்றும் செயற்பாட்டுத் திறன் ஆகியவற்றில் எமது கவனத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதோடு மாறிவரும் சந்தைச் சூழலுக்கு ஏற்ப எமது செயற்பாடுகளையும் தொடர்ந்து மாற்றியமைத்து வருகின்றோம். நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் நீண்டகால செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில், எமது பணிப்பாளர் சபைகளின் கட்டமைப்பையும், ஒட்டுமொத்த நிர்வாக மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்புகளையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றோம். குழுமத்தின் மாறிவரும் மூலோபாய முன்னுரிமைகளுக்கு ஆதரவளித்தல், பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் மற்றும் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்வதை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அனுபவம், நிபுணத்துவம் மற்றும் சுயாதீன மேற்பார்வை ஆகியவற்றுக்கு இடையில் சரியான சமநிலையைப் பேணுவதில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு மத்தியிலும் எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்தல், சிறந்த நிறுவன நிர்வாக நடைமுறைகளைப் பேணுதல் மற்றும் பங்குதாரர்களின் நீண்டகால மதிப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றிலேயே எமது கவனம் தொடர்கிறது.” என்றார்.
First Capital Holdings PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி டில்ஷான் வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், “2026 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் நாம் பதிவு செய்த ரூ. 1.27 பில்லியன் வரிக்குப் பின்னரான நட்டத்திற்கு, அதிகரித்த வட்டி வீதங்கள் மற்றும் அரசாங்கப் பிணையங்களின் வருவாய்களில் ஏற்பட்ட அழுத்தங்கள் முக்கிய காரணங்களாக அமைந்தன. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், நீண்டகால சந்தை வளர்ச்சிக்கும் சீரான கொள்கை வழிகாட்டுதல் அவசியமானது. அதே வேளை, எமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விடயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றோம். நாம், டிஜிட்டல் சேவைகள் ஊடாக வாடிக்கையாளர்களை மேலும் சென்றடைவதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை இலகுவாக அணுகுவதற்குமான வசதிகளை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன் முதலீட்டாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கும் சந்தை நிலைமைகளுக்கும் ஏற்ப எமது சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றோம்.” என்றார்.
































