Nov 19, 2026 - 08:57 PM

கடுவலை நகர மத்தியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் இன்று (19) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலின் போது, நச்சு புகையை சுவாசித்தமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மின் ஒழுக்கு காரணமாகவே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கின்றனர்.
குறித்த கட்டடத்தில் மின்சார உபகரண விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்த நாரத சந்தருவன் (35), அவரது மனைவி லக்ஷிகா மதுஷானி (28) மற்றும் அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகளான திலேனி ஹசன்யா (5), ஒனேலி பஹன்யா (2) ஆகியோரே இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடுவலை நகரில் அமைந்துள்ள இந்த இரண்டு மாடி மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை 5.30 அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸாரும் கோட்டை தீயணைப்புப் பிரிவு அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தீ அணைக்கப்பட்டதன் பின்னர், தீயணைப்புப் படையினர் கடையின் மேல் மாடியைச் சோதனையிட்ட போது, அங்கிருந்த கட்டிலில் தம்பதியினர் மற்றும் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த குடும்பத்தினர் தலாஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், சில நாட்களில் குறித்த கட்டடத்தின் மேல் மாடியிலுள்ள பின்பக்க அறையில் இவர்கள் தங்கியிருந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த மேல் மாடியின் வெளியேறும் கதவு திறக்க முடியாதவாறு முழுமையாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நால்வரின் சடலங்களும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற இடத்தைத் தடயவியல் பொலிஸார் (SOCO) மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டுள்ளதுடன், கடுவலை நீதவானும் இன்று பிற்பகல் ஸ்தலத்திற்குச் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
சம்பவம் தொடர்பில் கடுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
































