Nov 19, 2026 - 09:42 PM

கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயற்சிக்கப்பட்ட 71 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினை இந்திய வருவாய் விசாரணைப் பணியக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், இது தொடர்பில் சென்னையில் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளதாகவும் இந்திய நிதியமைச்சு தெரிவித்தது.
நடப்பு ஆண்டில் இந்தியாவில் பதிவான மிகப்பெரிய ஒற்றை ஹெரோயின் பறிமுதல்களில் இதுவும் ஒன்று என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பாரிய நடவடிக்கையாக, 71.24 கிலோகிராம் ஹெரோயின் தொகுதியை கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு, கடந்த 17 முதல் 18 ஆம் திகதிவரை சென்னையில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன் மூலம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையிலிருந்து கணிசமான அளவு ஹெரோயின் இலங்கைக்குக் கடத்துவதற்காக எடுத்துச் செல்லப்படுவதாக உளவுத் தகவல் தெரிவித்திருந்தது.
சந்தேகத்துக்குரிய வாகனத்தையும், அதற்குப் பாதுகாப்பாகச் சென்ற இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் சென்னையில் இடைமறித்தனர்.
வாகனத்தைச் சோதனையிட்டபோது, வெளிர் வெள்ளை நிறத் தூள் அடங்கிய 69 பொதிகள் கண்டெடுக்கப்பட்டன.
சென்னையைப் போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தி, திருச்சிராப்பள்ளி (திருச்சி) வழியாக கரையோரப் பாதையில் இலங்கைக்குக் கடத்துவதே கடத்தல் காரர்களின் நோக்கம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
































