Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: பாதாள உலகக் குழு மோதலே காரணம் என அம்பலம்

Sep 14, 2026 - 11:03 PM

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: பாதாள உலகக் குழு மோதலே காரணம் என அம்பலம்
Mobitel Inner 1278

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளிக்கொணர்வதில் பொலிஸார் வெற்றியடைந்துள்ளனர். 

சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான படோவிட்ட அசங்க மற்றும் குடு அவிஷ்க ஆகியோரின் குழுக்களுக்கு இடையே நிலவிய பகையே இக்கைக்குண்டுத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். 

அத்துடன், குண்டுத் தாக்குதலை நடத்த வந்த சந்தேகநபர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதியின் தொலைபேசித் தரவுகள் மூலமும் பல தகவல்கள் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளன. 

மேலும், இத்தாக்குதலை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் நெதிமால ஆசிரி மாவத்தை பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் புறப்பட்டுச் செல்லும் காட்சிகள் அடங்கிய CCTV காட்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

அவிஷ்கவின் நெருங்கிய கூட்டாளியான 'கொஸ்மல்லி' என்ற குற்றவாளியின் மாமாவும் அவரது கோஷ்டியைச் சேர்ந்த ஒருவருமே இத்தாக்குதலை வழிநடத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சந்தேகநபர் தெஹிவளை, வனரதன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரைக் கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன. 

அவிஷ்க குழுவின் முதன்மை கூலிப்படை கொலையாளியாக இவரே செயற்பட்டுள்ளார் என்றும், கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கின் நேரடி மேற்பார்வையில் ஒரு பொலிஸ் குழுவும், மேல் மாகாண தெற்கு திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர தலைமையில் 3 பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை நடத்தி வருகின்றன. 

இதன்படி, கைக்குண்டுத் தாக்குதலுக்காக குற்றவாளிகள் வந்த முச்சக்கரவண்டியின் நிறத்தை மாற்றுவதற்காக அதை பழுது பாரக்கும் நிலையம் ஒன்றுக்கு ஒப்படைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும், அந்த நிலையத்தின் உரிமையாளரும் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். 

குறித்த முச்சக்கரவண்டி களுத்துறை நாகொட பகுதியில் வைத்து திருடப்பட்டு, பின்னர் தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் வைத்து அதன் நிறம் மாற்றப்பட்டுள்ளமை கல்கிஸ்ஸை பிரிவின் பொறுப்பதிகாரிக்கு தெரியவந்துள்ளது. 

அதனடிப்படையிலேயே அந்த நிலைய்த்தின் உரிமையாளரான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், முச்சக்கரவண்டியை அங்கு கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, வீட்டிற்குள் கைக்குண்டை வீசிய சந்தேகநபரும், முச்சக்கரவண்டி சாரதியும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வீட்டின் மீது கைக்குண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர் அத்திட்டிய மாந்திரிமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார். இவர், கல்கிஸ்ஸை பொது மயானத்தின் காவலாளியாக செயற்பட்ட 'செண்டோ' என்ற குற்றவாளியின் தந்தையை சுடுவதற்கு வந்த துப்பாக்கிச் சூட்டாளர்களுக்கு தங்குமிட வசதி அளித்துள்ளமையுடன், கடந்த ஓகஸ்ட் 01 ஆம் திகதி 'குடு அஞ்சு' என்பவனின் காசாளரை படுகொலை செய்த நபர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டாலும், இந்தச் சம்பவத்தில் நெஞ்சைப் பிளக்கும் உண்மை என்னவெனில், இந்த குண்டுத் தாக்குதல் தவறான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளமையாகும். 

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு அப்பாவிச் சிறுவர்கள் உயிரிழந்தனர். 

தாயின் அரவணைப்பும் இன்றி, தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 17 வயதான கசுன் ரஷ்மிக மற்றும் அவரது சகோதரரான 11 வயதான துமிந்த கிஹான் ஆகிய இருவருமே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். 

பாதாள உலகத்தைப் பற்றி எதுவுமே அறியாத, தாயின் குறையையும் போக்கி தங்களை வளர்த்த தந்தையுடன் ஆயிரம் கனாக்களுடன் வாழ்ந்த இரு அப்பாவி சிறுவர்களுமே இந்த குண்டுத் தாக்குதலால் தங்களின் உயிர்களை வீணாகப் பலி கொடுத்துள்ளனர். 

இத்தாக்குதலில் சிறுவர்களின் தந்தையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பாதாள உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத, முச்சக்கரவண்டி ஓட்டி தனது இரு பிள்ளைகளையும் காப்பாற்றி வந்த அந்த அன்புத் தந்தை, தற்போது ஒரு காலை இழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மனைவியும் இல்லாத சூழலில், தான் ஆசையாக வளர்த்த இரு பிள்ளைகளின் முகத்தைக் கூட கடைசி நேரத்தின் போது நேரில் பார்க்க முடியாமல், வைத்தியசாலைக் கட்டிலில் கண்ணீர் வடித்தபடி அந்தத் தந்தை தவிக்கின்றார். 

இதேவேளை, இந்த இரு சிறுவர்களின் படுகொலை தனது இதயத்தை உலுக்கிய சம்பவமாகும் எனக் குறிப்பிட்டு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரூ பிரான்ஸ் (Marc-André Franche) எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். 

எந்தவொரு குழந்தையும் ஒருபோதும் இத்தகைய வன்முறைக்கு பலியாகக் கூடாது என்றும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்த சிறுவர்களின் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். 

ஒரு கிராமத்தையே அழவைத்துவிட்டு அநியாயமாகப் பிரிந்த இந்த சிறு சகோதரர்களின் இறுதிக்கிரியைகள் இன்று கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இடம்பெற்றன. 

இறுதியில்... தங்கள் உயிர் ஏன் பறிக்கப்பட்டது என்று கூட அறியாமல் விடைபெற்ற இந்த அப்பாவிச் சிறுவர்கள், இந்த சமூகம் எவ்வளவு பாதுகாப்பற்றது, பயங்கரமானது என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டு நாடே கண்ணீர் சிந்த உலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

Mobitel 1278