Sep 14, 2026 - 11:29 PM

கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் ஊடாக, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் கற்றல் சூழலை அமைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் மற்றும் பிரின்சஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரிகளின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, இன்று (14) மொறட்டுவை பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "கல்வியினூடாக நாம் எதிர்பார்ப்பது தற்கால சமூகத்தைப் புரிந்துகொண்டு, அச்சமூகத்தைச் சிறந்த பாதையில் வழிநடத்தக்கூடிய எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதேயாகும். அந்தப் பாரிய கடமைக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயற்படுத்திவரும் இந்த மாற்றத்திற்கான தருணத்தில், இத்தகைய பாடசாலைகள் விசேட கடமையொன்றை ஆற்ற வேண்டியுள்ளது.
அதாவது அரசாங்கம் என்ற வகையில் நாம் மனித வளத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்திருக்கின்றோம். அப்பயணத்தில் கல்வி மீது நாம் விசேட கவனத்தைச் செலுத்தியிருக்கின்றோம். நாம் முறைமைக்கு அமைவாகக் கல்விக்காக ஒதுக்கும் தொகையை ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டத்திலும் அதிகரித்துவருகின்றோம்.
எனினும், அந்தச் செயன்முறை இலவசக் கல்வியை உருவாக்கியபோது இருந்த தத்துவத்தில் உள்ளடங்கியுள்ள அனைத்துக் கோட்பாடுகளையும் உள்ளடக்கும் வகையில் இடம்பெற வேண்டும். அந்த இலக்குகளை அடைவதற்குத் தேவையான ஒத்துழைப்பு உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்" எனத் தெரிவித்தார்.





























