Oct 21, 2026 - 10:11 AM

இலங்கை பாராளுமன்றத்தின் நவராத்திரி விழா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (20) பாராளுமன்ற வளாகத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
சபாநாயகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பல்லின மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தினால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்து மதக் குருமார் நவராத்திரி பூஜைகளை முன்னெடுத்து அனைவருக்கும் ஆசீர்வாதங்களை வழங்கினர். இங்கு பரதநாட்டிய நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
நற்சிந்தனையுடன் நடத்தப்படும் இந்தப் பூஜை விழா முழு நாட்டிற்கும் ஆசீர்வாதமாக அமையும் எனத் தெரிவித்தார். ஏனைய கலாசாரங்களுக்கு மதிப்பளித்து, சமய மற்றும் கலாசார நல்லிணக்கத்தைப் பேணுவதன் மூலம் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற நவராத்திரி விழாவில் உரையாற்றிய சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன குறிப்பிடுகையில்,
இந்து சமய நம்பிக்கையின்படி துர்க்கை அம்மனின் அருளால் தீமைகள் நீங்கவும், லட்சுமி தேவியின் அருளால் செல்வமும் செழிப்பும் பெருகவும், சரஸ்வதி தேவியின் அருளால் ஞானம் மேம்படவும் தாம் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார். மேலும், அனைவரினதும் பங்களிப்புடன் எவ்வித வேறுபாடுகளுமின்றி இவ்வாறான விழாக்களை ஏற்பாடு செய்வது சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இந்து பக்தர்களால் மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் நிகழ்வாக இந்த நவராத்திரி விழா காணப்படுகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஒக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவதுடன், முப்பெரும் சக்திகளை நினைத்து ஒன்பது இரவுகள் வழிபடும் நிகழ்வாகும்.
இதில் முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கா தேவியை நினைத்து வழிபாடுகள் நிகழ்த்தப்படும். அடுத்த மூன்று நாட்கள் அழியாத செல்வத்தையும் புகழையும் தரும் லக்ஷமி தேவியை வேண்டியும், இறுதி மூன்று நாட்கள் கல்விச் செல்வத்தை வேண்டி சரஸ்வதி தேவியை நினைத்தும் வழிபாடுகள் நிகழத்தப்படும். பத்தாவது நாளில் வித்யாரம்பம் இடம்பெறும்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் இந்து மதக் குருமார்கள், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பிரதிக் குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஆளும் கட்சியின் முதற்கோலாசானும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட அமைச்சர்கள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக உள்ளிட்ட ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உட்பட பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள், இணைந்த பணியாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

































