Oct 21, 2026 - 12:11 PM

SDB வங்கி, 35 ஆண்டுகளுக்கும் மேலான நிதித்துறை அனுபவம் கொண்ட, மிகவும்
மதிக்கப்படும் வங்கியாளரான மனோஜ் அக்மீமனவை தனது பிரதம நிறைவேற்று அதிகாரியாக
நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இவர், வங்கியின் மூலோபாய வணிக விரிவாக்கம் மற்றும்
டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்துவதோடு, இலங்கை முழுவதும் உள்ள நுண், சிறு மற்றும்
நடுத்தர நிறுவனங்களுக்கு வலுவூட்டும் தனது முக்கிய நோக்கத்தையும் முன்னெடுத்துச்
செல்வார்.
அக்மீமன அவர்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தனிநபர் வங்கிச் சேவைகள்,
மூலோபாயம் வகுத்தல், கிளைச் செயல்பாடுகள், கடன் நிர்வாகம் மற்றும் மீட்புகள் உள்ளிட்ட
நிதிச் சேவைகளில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். SDB வங்கியில் நிர்வாகத்
தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, அவர் சம்பத் வங்கி பிஎல்சியில் ஒரு சிறப்பான
தொழில் வாழ்க்கையைக் கொண்டிருந்தார். அங்கு அவர் உயர் நிர்வாகத்திற்கு நேரடியாக
அறிக்கை அளிக்கும் சிரேஷ்ட நிர்வாகப் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
கடன் கட்டுப்பாடு, கடன் நிர்வாகம், மீட்புகள் மற்றும் சட்டப் பிரிவுகளின் சிரேஷ்ட பிரதிப்
பொது முகாமையாளராகவும், நெருக்கடிக்குள்ளான கடன் தொகுப்புகளின் மூலோபாய
முகாமைத்துவம், வணிகப் புத்துயிரளிப்பு, மறுசீரமைப்பு மற்றும் சட்ட மீட்புக்
கட்டமைப்புகளையும் வழிநடத்தியுள்ளார்.
வெளிநாட்டு நாணய வங்கிச்சேவைப் பிரிவு மற்றும் நிறுவன நிதியின் சிரேஷ்ட பிரதிப் பொது
முகாமையாளர், பிரதம மூலோபாய அதிகாரி மற்றும் கிளை வங்கிச் சேவையின் பிரதிப்
பொது முகாமையாளர் உள்ளிட்ட தனது முந்தைய நிர்வாகப் பதவிகளில், அவர் நிறுவன நிதிக்
கருவிகள், வெளிநாட்டுக் கடன்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதி வழங்கல், கூட்டுக் கடன்கள்,
கிளை வலையமைப்புகள் மற்றும் குறைந்த செலவிலான வைப்புத்தொகைகளை
வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்பார்வையிட்டுள்ளார். மேலும், வங்கியின் துணை
நிறுவனங்கள் முழுவதும் Balanced Scorecard (சமச்சீர் செயல் நிறைவு மதிப்பீட்டு அட்டை)
போன்ற மூலோபாயம் சார்ந்த கட்டமைப்புகளை அவர் ஒருங்கிணைத்துள்ளார்.
அவரது தொழில் வாழ்க்கையில், கட்டார் வர்த்தக வங்கியில் அங்கீகாரத் தலைவராகப்
பணியாற்றிய சர்வதேச அனுபவமும் அடங்கும். அங்கு அவர் முக்கிய சர்வதேச அட்டைத்
திட்டங்களின் செயல்பாடுகளை வழிநடத்தியுள்ளார். அவரது பதவிக்காலம் முழுவதும், பிரதான
பணிப்பாளர் சபை, சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவச் சபை, கடன் கொள்கை மற்றும்
இடர் மீளாய்வுச் சபை, மற்றும் முதலீட்டுச் சபை உள்ளிட்ட முக்கிய நிர்வாக அமைப்புகளில்
அவர் பணியாற்றியுள்ளார்.
அக்மீமனவின் நிதித் தலைமைத்துவப் பணி, ஒரு வலுவான கல்வி அடித்தளத்தின்
பக்கபலத்தைக் கொண்டுள்ளது. கொழும்பு 07, றோயல் கல்லூரியின் முன்னாள் மாணவரான
அவர், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார்; அங்கு
அவர் வணிக நிர்வாகத்தில் இளங்கலை அறிவியல் சிறப்புப் பட்டத்தையும், அதனைத்
தொடர்ந்து முதுகலை முகாமைத்துவக் கற்கை நிலையத்தில் வணிக நிர்வாகத்தில்
முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.
வாழ்நாள் முழுவதும் கற்கும் அர்ப்பணிப்புள்ளவரான இவர், பரந்த அளவிலான தொழில்முறைத் தகுதிகளையும் உறுப்பினர் பதவிகளையும் பெற்றுள்ளார். அவற்றுள் சில:
Institute of Bankers of Sri Lanka-இன் சிரேஷ்ட சக உறுப்பினர் மற்றும் Chartered Institute of Marketing
(UK)-இன் Chartered Marketer (UK) மற்றும் Professional Postgraduate Diploma தகைமை; Institute of Certified Management Accountants (UK/Australia)-இன் இணை உறுப்பினர்; வங்கி முகாமைத்துவம் மற்றும் கடன்
முகாமைத்துவத்தில் முதுகலை டிப்ளோமா பட்டங்கள்; மற்றும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற, மூலோபாயத் திட்டமிடலில் சிறப்புத் தேர்ச்சியுடன் கூடிய
கேம்பிரிட்ஜ் சர்வதேச முகாமைத்துவப் பட்டயம் போன்றவற்றையும் பெற்றுள்ளார்.
நிறுவனத் தலைமைத்துவத்தைத் தாண்டி, அக்மீமன அவர்கள் ஒரு நூலாசிரியராகவும் தேசியப்
பொருளாதார உரையாடலுக்குப் பங்களிப்பவராகவும் உள்ளார். செப்டம்பர் 2024-இல், வங்கித்
துறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வழிகாட்டியான “கடன் வழங்குதல்:
கருத்துகள், கோட்பாடு மற்றும் நடைமுறை” என்ற பாடப்புத்தகத்தை அவர் எழுதி
வெளியிட்டார். மேலும், நிறுவன ஆட்சி, வட்டி வீத வேறுபாடுகள், பேரியல் பொருளாதாரச்
சீர்திருத்தம் மற்றும் பொருளாதாரப் பிரமிட்டின் அடிமட்டத்தில் நிதி உள்ளடக்கத்தைப் பற்றிய
பல ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.
நிறுவனக் கடன் வழங்குதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி, மூலோபாயம்
மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றில் அவரது நிபுணத்துவம் மற்றும் நிலையான
வளர்ச்சி, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட புத்தாக்கம், நாடு தழுவிய பொருளாதார
முன்னேற்றம் ஆகியவற்றிற்கான SDB வங்கியின் உறுதிப்பாட்டிற்கும் ஆதரவளிக்கும்.
































