Sep 3, 2026 - 10:15 PM

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று பிற்பகல் 3.00 மணியுடன் நிறைவடைந்தது.
இருப்பினும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல மனுதாரர் தரப்பினர் குறித்த மனுக்கள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்கப்போவதில்லை என மனுக்கள் (Motions) மூலம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி 67 மனுக்களும் பல இடையீட்டு மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் கடந்த செப்டம்பர் 01 ஆம் திகதி தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, மனுக்கள் மீதான விசாரணையை முழுமையான நீதிபதிகள் குழாம் (Full Bench) முன்னிலையில் நடத்துமாறு மனுதாரர் தரப்பு முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதற்கமைய, ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அவ்விசாரணைகள் நேற்று பிற்பகலுடன் நிறைவடைந்தன.
மனுக்கள் விசாரணை நிறைவடைந்த நிலையில், அனைத்துத் தரப்பினரும் எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்வதற்காக இன்று பிற்பகல் 3.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும், முழுமையான நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறு கோரிய மனுவை உயர் நீதிமன்றம் எவ்வித காரணமும் கூறாமல் நிராகரித்துள்ளதாக மனுதாரர்கள் தங்களது மனுக்கள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், அரசாங்கத் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களின் பின்னர் வாய்மொழி மூல மறுமொழிகளை வழங்குவதற்குத் தாம் விடுத்த கோரிக்கைக்கு அனுமதி கிடைக்காமையினால், அரசாங்கத்தின் விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தல்களையும் எதிர்வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தின் முடிவு ரகசியமான முறையில், உரிய காலத்தில் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்படவுள்ளது.



























