Sep 3, 2026 - 10:31 PM

'போதம்' (Botham) கடல் சிங்கத்தின் உடல்நிலை தற்போது சீரடைந்து வருவதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் போதம் கடல் சிங்கம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் நிபுணத்துவ மதிப்பீடுகளின் மூலம் அப் பிராணி "Squamous cell carcinoma" என்ற புற்றுநோய் நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இதன்படி, வெளிநாட்டு நிபுணத்துவ கால்நடை மருத்துவரின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய போதம் பிராணிக்கு விசேட அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்குச் சொந்தமான தெஹிவளை உயிரியல் பூங்காவில் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இந்த விசேட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான சிக்கலான அறுவை சிகிச்சையொன்று கடல் சிங்கம் ஒன்றிற்கு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இப் பிராணிகள் தொடர்பான நிபுணரும், ஹாங்காங் Ocean Park இன் பணிப்பாளருமான கால்நடை மருத்துவர் Paolo பிராணியைப் பரிசோதித்து வழங்கிய பரிந்துரைகளுக்கு அமையவே இந்த விசேட அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டது.
இவ்அறுவை சிகிச்சையில் பங்கேற்ற நிபுணத்துவ கால்நடை மருத்துவர் உள்ளடங்கிய குழுவினர் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்காகத் தமது சேவையை தன்னார்வமாகவே வழங்கியிருந்தமை ஒரு விசேட அம்சமாகும்.



























